கடந்த 77 ஆண்டுகளில் 178 படங்களைத் தயாரித்துள்ள ஏ வி எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்றாலும் காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து வரும் நிறுவனம் .
புதுமையான படைப்புக்களை தருவதில் ஏ வி எம் நிறுவன நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் காலம் முதல் தொடர்ந்து முன்னணியில் இருந்துள்ளது.
முதல் முறையாக பின்னணி பாடுவதை அறிமுகப்படுத்திய படம் (நந்தகுமார் 1938), முதல் மொழி மாற்றுத் திரைப்படம் (ஹரிச்சந்திரா 1944) இசைக்கு ஏற்ப பாடல்களில் பின்னர் உதட்டசைவைப் பொருத்திக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்திய படம் (ஸ்ரீ வள்ளி 1945) பாடல்களே இல்லாமல் உருவான முதல் படம் ( அந்த நாள் 1954)…
நடிகர்களை அனிமேஷன் உருவங்களுடன் இணைத்து உருவாக்கிய முதல் படம் (ராஜா சின்ன ரோஜா 1989), சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான ஜவஹர்லால் நேரு கோல்டு மெடல் விருது பெற்ற படம் (ஹம் பாஞ்சி ஏக் தால் கே இன் 1957) டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய படம் (சிவாஜி 3D 2007).. இவை எல்லாம் ஏ வி எம் தயாரித்த படங்களே .
அண்ணா, கருணாநிதி, எம் ஜி ஆர், என் டி ராமாராவ் , ஜெயலலிதா ஆகிய ஐந்து முதல்வர்களுடன் பணியாற்றிய நிறுவனம் .
இவ்வளவு பெருமை மிக்க நிறுவனம் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் படங்களில் பயன்படுத்திய கலைப் பொருட்கள் , தொழில் நுட்பக் கருவிகளை பொது மக்களுக்கு காணத் தரும் வகையில்,
ஏ வி எம் ஹெரிடேஜ் மியூசியம் என்ற நிரந்தர காட்சிச்சாலையை ஏ வி எம் வளாகத்தில் நிறுவியிருக்கிறது .
பராசக்தி படத்தில் சிவாஜி தனது முதல் வசனத்தை ( ”சக்சஸ்”) பேசியதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம், இவ்வளவு காலம் பல்வேறு படங்களில் ஏ வி எம் நிறுவனத்தினர் பயன்படுத்திய – அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரையிலான – கேமராக்கள் , ஆடியோ , வீடியோ சாதனங்கள், லைட்கள், படத் தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகள் ,…
எம் ஜி ஆர், எஸ் எஸ் வாசன் , மெய்யப்பச் செட்டியார் போன்றோர் 1940 , 1950 களில் பயன்படுத்திய கார்கள், சிவாஜி படத்தில் ரஜினி பயன்படுத்திய கார், பல்லக்கு , ரஜினி சிலை, ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர 1910 முதல் 2000 வரையிலான பலதரப்பட்ட கார்கள், பைக்குகள் , குறிப்பாக 1886 ஆம் ஆண்டின் பென்ஸ் மோட்டார் வாகன், உள் எரிப்பு எந்திரத்தால் இயக்கப்பட்ட உலகின் முதல் ஆட்டோமொபைல்,
1986 ஆண்டைச் சேர்ந்த, ஹென்றி ஃபோர்டின் முதல் சோதனை ஆட்டோமொபைலான ஃபோர்டு குவாட்ரி சைக்கிள் என்று பல ஆச்சர்யமூட்டும் விசயங்களும் இந்த மியூசியத்தில் இருக்கின்றன .
பெருமைக்குரிய இந்த மியூசியத்தை, முதல்வர் ஸ்டாலின், டி ஆர் பாலு மற்றும் பொன்முடியோடு வந்து திறந்து வைத்தார் . நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் கமல்ஹாசன், வைரமுத்து, ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
ஏவி எம் நிறுவனத்தில் இருந்து ஏ வி எம் சரவணன், குகன் , அவரது மகள் அருணா குகன், இயக்குனர் எஸ் பி முத்துராமன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர் . எம் ஜி ஆர் பயன்படுத்திய கார், பராசக்தி தொடர்பான சக்சஸ் நினைவுச் சின்னம் ஆகியவற்றை முதல்வர் ஆர்வமாகப் பார்வையிட்டார் .
நிகழ்வில் அவ்வப்போது தயங்கி நின்ற தன் மகளை ஒவ்வொரு முறையில் அருகில் அழைத்து முன்னிலைப்படுத்தினார் குகன்.
கருணாநிதி, எம் ஜி ஆர் , ரஜினி ஆகியோரின் உரை உட்பட , ஏ வி எம் செய்த சாதனைகள் பற்றிய விளக்கப் படத்தையும் அனைவரும் பார்த்தனர் .
இனி இந்த மியூசியம் நிரந்தரமாக தினமும் காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை இயங்கும் .
நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு 200 சிறுவர்களுக்கு 150 .