டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரிக்க , உதயநிதி, அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் , ராஜ் குமார் பிச்சுமணி நடிப்பில் மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் .
பண்பலை வர்ணனையாளப் பெண் ( அதிதி ராவ் ) மீது பார்வை மாற்றுத் திறனாளி இசைக் கலைஞன் ஒருவனுக்கு காதல் வருகிறது . அந்த காதலை அவள் உணரும் சமயத்தில், பெண்களைக் கடத்தி துண்டு துண்டாக வெட்டிப் போடும் சைக்கோ கொலைகாரன் (ராஜ் குமார் பிச்சுமணி ) ஒருவனால் அவள் கடத்தப்படுகிறாள் .
வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ( இயக்குனர் ராம் ) , கமிஷனர் ( ஆடுகளம் நரேன் ) ஆகியோர் வழக்கமான பாணியில் வழக்கை எதிர்கொள்ள , தன் காதலியை காக்க விரும்பும் இசைக் கலைஞன் , விபத்தில் பாதிக்கப்பட்டு பனி ஒய்வு பெற்று சக்கர நாற்காலியில் உழலும் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உதவியுடன் காப்பாற்றுவதற்கு களம் இறங்க , அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த சைக்கோ .
மிஷ்கின் படம் . அந்த பாணியிலான படமாக்கல் . அது முதல் சிறப்பு . ஆரம்ப ஷாட் ஒன்றில் பசங்க கிரிக்கெட் விளையாடுவதை சும்மா காண்பித்து விட்டு. தொடர்ச்சியாக அதே இடத்தில் வரும் காட்சியில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது உட்பட இயக்கத்தில் பல நல்ல உத்திகள் .
இளையராஜாவின் இசை , தன்வீரின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு அசத்தலான பக்க பலம் .
உதயநிதிக்கு இதுவரை அமையாத பார்வை மாற்றுத் திறனாளி கதாபாத்திரம் . சிறப்பாக நடித்து உள்ளார் .
தனது அட்டகாசமான நடிப்பால் அசர அடிக்கிறார் நடிப்பு ராட்சசி நித்யா மேனன் . அற்புதம் .
கூலான வில்லனாக மிரள வைக்கிறார் ராஜ் குமார் பிச்சுமணி. இயக்குனர் ராமின் நடிப்பு இயல்பு. கடைசியில் ரொம்ப டயர்டா இருக்கு என்பதை பல அர்த்தங்களில் அவர் பேசும் விதம் நெகிழ்வு .
கொஞ்சம் காமெடி கொஞ்சம் செண்டிமெண்ட் கேரக்டரில் சிங்கம் புலி கூட இந்தப் படத்தில் பாராட்ட வைக்கிறார் .
கண்காணிப்பு கேமரா விவகாரம் உட்பட பல லாஜிக் மீறல்கள் . சைக்கோவின் காரணப் பின் கதைக்கும் அவன் பெண்களை அதுவும் தத்தம் துறையில் நம்பர் ஒன் பெண்களை கடத்துவதற்கும் என்ன சம்மந்தம் ?
உண்மைக்கு அருகில் என்ற பெயரில் இவ்வளவு வன்முறை குரூரம் சினிமாவில் காட்டப்பட வேண்டுமா ?
மாற்றுத் திறனாளி காதலன் எப்படி தனது காதலியை மீட்கப் போகிறான் என்ற நோக்கில் துவங்கும் கதை, கடைசியில் சைக்கோவை நாயகன் ஆக்கும் விதத்தில் பயணித்தது ஏனோ ?
சைக்கோ…. ஜஸ்ட் ஒரு எக்கோ