கே.பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தில் “கடவுள் அமைத்து வைத்த மேடை ” பாடலில் “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” வரிகள் மிகப் பிரபலம் . இந்த வரியின் முதல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டு, ஆந்திர அழகி அஞ்சனா , மலேசிய அழகி ஸ்டெபி என்று இரண்டு கதாநாயகிகளுடன் அறிமுக நாயகன் சிலம்பரசன் நடிக்க, ஆண்டாள் ரமேஷ் எழுதி இயக்கி இருக்கும் படம் இன்னார்க்கு இன்னாரென்று.
ஜாதி வேற்றுமை மட்டுமல்லாது பொருளாதார ஏற்றத்த் தாழ்வுகளாலும் உறவுகளும் பிரிவுகளும் உருக்கொள்ளும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் அவனது பணக்கார முறைப் பெண்ணுக்கும் காதல் . பணக்கார மாமா விஷயம் தெரிந்து கோபமாகிறார். காரணம் நாயகனின் அப்பா ஒரு ஏழை சமையல்காரர். மாமாவின் மகன் அப்பாவை அடித்து வீழ்த்த அவர் மரணமடைகிறார்.
மாமாவிடம் நியாயம் கேட்டு வரும் நாயகனிடம் பணம் , வசதி, இவற்றின் அருமை பெருமைகளை சொல்லி “ஒரு மாதத்துக்குள் ஒரு கோடி சம்பாதித்து வா. என் பெண் உனக்குத்தான்” என்கிறார் மாமா .இப்படியாக சூப்பர் ஸ்டார் ரஜினி அருணாச்சலம் படத்தில் 30 நாளில் 30 கோடியை செலவு பண்ண வேண்டும் என்றால் இந்தப் படத்தில் நாயகன் 30 நாளில் ஒரு கோடியை சம்பாதிக்க வேண்டி இருக்கிறது .
சென்னைக்கு வந்து தன் சித்தப்பூவின் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் உணவுக்டையை தன் சமையல் திறமையால் நிமிர வைக்கிறான் நாயகன் . அதே நேரம் ஒரு பெரிய ஹோட்டல் நடத்தி நொடித்துப் போன ஒருவர் இவனது சமையல் திறமையை அறிந்து இவனை வைத்து ஹோட்டலை மீண்டும் ஆரம்பித்து வெற்றி பெறுகிறார் . அந்த ஹோட்டல் அதிபர் மகளுக்கு நாயகன் மீது காதல் வருகிறது . ஒரு நிலையில் ஹோட்டல் அதிபரின் உயிரையே நாயகன் காப்பாற்ற , தன் மகனை அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.
இவனோ தனது காதல் கதையை கூற , ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறார் . அங்கே போனால் மாமன் மகள்….. ஒரு பெரும் இழப்பில் இருக்கிறாள். அவளுக்கு வாழ்வு தர அவன் முயல, ஹோட்டல் அதிபரின் மகளும் அவனை திருமணம் செய்து கொள்ள போராட கடைசியில் யாருடன் அவனுக்கு திருமணம் ஆனது என்பதே இந்த படம் .
‘இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ என்ற வரிகளின் மெட்டை படம் முழுக்க பின்னனி இசையாகப் பயன்படுத்துகிறார்கள்.
கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப் பழக் காமெடியை ரீமேக் செய்து இருக்கிறார்கள்.
குடியின் கொடுமைக்கு எதிராக ஒரு பாடலுக்கு படத்தில் வாயசைத்து நடிக்கிறார் ஆண்டாள் ரமேஷ் .
கதை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் . திரைக்கதை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் . வசனம் , பாடல்கள் , இசை , ஒளிப்பதிவு, நடனம் நடிப்பு, இயக்கம் எல்லாமே இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
இன்னா நாற்பது இனியவை நாற்பது மாதிரி …. இந்தப் படத்துக்கு இப்படியாக ‘இன்னும் நாற்பது’ சொல்லலாம் .
இன்னார்க்கு இன்னாரென்று .. யாரார்க்கு என்ன வரும் என்று …..!