வி.டி.வி. கணேஷ் தயாரிப்பில் சந்தானம் வைபவி இணையராக நடிக்க, . இவர்களுடன், விவேக், சம்பத்ராஜ், ரோபோ ஷங்கர், வி.டி.வி.கணேஷ் மற்றும் பலர் நடிக்க ,
லொள்ளுசபா காலம் முதல் சந்தானத்தின் நண்பராக இருக்கும் சேதுராமன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “சக்க போடு போடு ராஜா”.
நடிகர் சிம்பு முதல்முறையாக இசையமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பை செய்துள்ளார்.
சந்தானத்திடம் கட்டப் பஞ்சாயத்து செய்த பாஜக வழக்கறிஞர் விவேக் ஆனந்தை சந்தானம் தாக்கிய வழக்கில் ,
சந்தானத்துக்கு முன் ஜாமீன் கிடைக்குமா ? இல்லையா என்ற நிலையில் ,
படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் இருந்தது . ஒரு வழியாக சந்தானத்துக்கு ஜாமீன் கிடைத்து , சந்தானம் நிகழ்ச்சிக்கு வருவது உறுதியானது .
அதே நேரம் பொது திரையரங்கில் நிகழ்ச்சி நடந்தால் பாஜக வினரால் வன்முறை நடக்கலாம் என்ற யூகம் காரணமாக ,
பிரசாத் லேபுக்குள் உள்ள தியேட்டரில் படத்தின் ஆடியோ விழா நடந்தது .
அங்கேயும் பிரச்னை வரலாம் என்று எண்ணி சந்தானத்தின் ரசிகர்களும் பாமகவினரும் ஏராளமாக திரண்டு இருந்தனர் .
தவிர சிம்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் தன் ரசிகர்களை அனுப்பி இருந்தார் .
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஆர்யா கூட , எதுவும் பிரச்னை இருக்காதே என்று,
பலமுறை போனில் உறுதி செய்து கொண்ட பிறகே வந்ததாக சந்தானம் சொன்னார் .
நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் திரையிடப்பட்டன .
காமெடியனாக இருந்து பயந்த சுபாவ ஹீரோவாக அறிமுகம் ஆன சந்தானம் இதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாறி,
நடனம் சண்டை எல்லாவற்றிலும் அதகளம் செய்து இருக்கிறார் .
“முடிஞ்ச வரைக்கும் மூளையைத்தான் யூஸ் பண்ணுவேன் . முடியலனாதான் முஷ்டியை யூஸ் பண்ணுவேன்”என்ற ரீதியில்,
அண்மையில் நடந்த சம்பவத்துக்கு பொருத்தமாக வசனம் வேறு முன்னோட்டத்தில் இருக்கிறது .
நிஜத்தில் சந்தானத்தின் கையிலும் பிளாஸ்திரி . (காரணத்தை பின்னால் ஆர்யா சொல்வார்)
எனில் படத்தில் காமெடிக்கு யார் ?
மற்ற ஹீரோவின் படங்களில் சந்தானத்துக்கு இருந்த காமெடி முக்கியத்துவத்தில் இந்தப் படத்தில் நடித்து இருப்பவர் விவேக் . கூடவே மயில்சாமியும் !
சிம்புவின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன . தேவதை தேவதை என்ற பாடலை மிக அட்டகாசமாக படமாக்கி் இருக்கிறார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய விவேக் ” ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா என்று நான் பேசிய வசனத்தை ஒரு படத்தில் சந்தானம்,
‘ ஆயிரம் விவேக் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா ” என்று மாற்றி பேசி என்னை கவுரவப்படுத்தி இருந்தார் .
எனவே அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கணேஷ் அழைத்த போது நான் மறுக்கவில்லை . படம் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா “. சந்தானத்துக்கு ஆக்ஷன் ஹீரோ வேடம் பொருத்தமானது. சமீபத்தில் கூட, அவர் உண்மையிலேயே ஆக்ஷன் ஹீரோவாக நடந்துகொண்டார்.
அடிச்சவருக்கே கையில் பிளாஸ்திரி போடும் அளவுக்கு காயம் என்றால், அடிவாங்கியவருக்கு காயம் எப்படி இருக்கும்?” என்றார் .
சந்தானம் தன் பேச்சில் ” நடிகர்களை வசதி செய்து கொடுத்து கவனித்துக் கொள்வதில் வி டி வி கணேஷ் மாதிரி சிறப்பான தயாரிப்பாளர் யாருமே இல்லை .
படத்தில் எனக்கு ஆக்ஷன் செண்டிமெண்ட் , லவ் என்று நிறைய வேலை இருக்கு . ஆனால் காமெடி என்ற சிறப்பான விசயத்தை யார் செய்வது ?
அதுவும் படத்தின் கடைசியில் என்னையே கலாய்க்கும் ஒரு கேரக்டர் . அதற்கு விவேக் சாரை விட்டால் யாருமே இல்லை . எனவே அவரிடம் கேட்டோம் .
அவரும் முழு மனதோடு தனது கிரியேட்டிவிட்டி எல்லாம் போட்டு நடித்து இருக்கிறார் அவருக்கு நன்றி .
இரண்டே இரண்டு காட்சி என்றாலும் மாமா மயில்சாமி அந்த ரெண்டு காட்சியிலும் அசத்தி இருக்கிறார் ” என்றார்.