பிரபல தயாரிப்பாளரும் கதை வசனகர்த்தாவுமான கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இணை இயக்குனராகவும், களவாணி படத்தின் நிர்வாகத் தயாரிப்பளாரகவும் பணியாற்றி
தனது ஃபரா சரா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வீரையன்.
1990 காலகட்டத்தில் நிகழும் படமாக வரும் இந்தப் நாயகனாக இனிகோ பிரபாகர் — நாயகியாக இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த ஷைனி இருவரும் நடிக்க,
இவர்களுடன் கயல் வின்சென்ட், தென்னவன், வேல. ராமமூர்த்தி, ஆரண்ய காண்டம் வசந்த் , விஜய் டிவி ஹேமா.. இவர்களுடன் பிரீத்திஷா என்ற திருநங்கை ஆகியோர் நடித்து இருக்கும் படம் இந்த வீரையன் .
1990 காலகட்டம் என்பது மட்டுமல்ல ….பிற்காலச் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கி மாபெரும் தஞ்சையில் அந்த நினைவுச் சின்ன்னங்கள், கால ஓட்டத்தில் தடம் புரண்டு,
இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சொல்லும் படம் இது .
அதாவது, பொதுவாக தஞ்சையின் வரலாற்று சின்னம் என்றால் கோவில் மற்றும் அரண்மனை இவற்றைதான் சொல்கின்றனர் . இவற்றைதான் காட்டுகின்றனர்.
குண்டு வைத்து உடைக்க முயன்றும் உடைக்க முடியாத காரணத்தால் விட்டு விட்டுப் போய் விட்ட கட்டுமாணங்களும் உண்டு
அனு தினமும் தானே அழிந்து கொண்டே இருக்கும் அவற்றை எல்லாம் தேடித் தேடிப் போய், அந்த பகுதிகளைப் பின்புலமாக பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள் .
அவற்றில் சுமார் எண்பது சதவீதம் இதுவரை கேமராக் கண்களிலேயே படாதவை . ஆக, இந்த வீரையன் படத்தின் பின்புலமாக வரும் ஒவ்வொரு இடமும், சோழப் பேரரசின் மிச்சங்களைக் காட்டும்.
இப்படிப்பட்ட சிறப்பைக் கொண்ட வீரையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, சற்குணம், எஸ்.ஆர்.பிரபாகரன், கே.எஸ்.தங்கசாமி மற்றும் ‘கில்டு’ தலைவர் ஜாக்குவார் தங்கம்,
தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண், களவானி தயாரிப்பாளர் நசீர், ஒளிப்பதிவாளர் எம் எஸ் பிரபு உள்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
‘வீரையன்’ இசைத் தட்டை இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட இயக்குநர்கள் சற்குணம் மற்றும் எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக் கொண்டனர்.
படத்தின் நாயகன் இனிகோ பிரபாகர் பேசும்போது ” சீனு ராமசாமி சாரின் ‘தென் மேற்கு பருவக் காற்று’ படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டிய வாய்ப்பு,
‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தவறிப் போனது. அதோடு, ‘நீர்ப்பறவை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களிலும்,
சீனு ராமசாமி சார் அழைத்தும் அந்தப் படங்களிலும் நான் நடிக்க முடியாமல் போனது . அவர் இங்கு வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம் .
சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல அடையாளம் கொடுத்த பிரபாகரன் சார் வந்திருக்கிறார் . அவருக்கு நன்றி . களவானி படம் தந்த சற்குணம்சார் வந்திருக்கிறார் .
அவருக்கு நன்றி . என் மேல் அன்பு கொண்ட சரண் சார் வந்திருக்கிறார் . அவருக்கு நன்றி
படத்துக்கு அருணகிரி சிறப்பாக இசை கொடுத்து இருக்கிறார் . பாடலாசிரியர்கள் யுகபாரதி, கார்த்திக் நேத்தா நல்ல வரிகளை கொடுத்துள்ளனர்.
தயாரித்து இயக்கி இருக்கும் பரீத் மிக சிறப்பாக படத்தை உருவாக்கி இருக்கிறார் . எல்லோருக்கும் நன்றி ” என்றார் .
இசை அமைப்பாளர் அருணகிரி பேசும்போது ” சண்டி வீரன் படத்தில் அலுங்குற குலுங்கற பாடல் மூலம் எனக்கு அடையாளம் கொடுத்த சற்குணம் சாருக்கு நன்றி .
அந்தப் பாடல் அவ்வளவு சிறப்பாக வர , சற்குணம் சார்தான் காரணம். அதன் பிறகு எனக்கு கிடைத்த சிறந்த படம் இந்த வீரையன்” என்றார்
நிகழ்ச்சியில் பேசிய எஸ் பி பி சரண் ” இனிகோ பிரபாகர் மிக சிறந்த திறமைசாலி . கூடிய விரைவில் நல்ல இடத்தை பிடிப்பார் . பரித் மிக சிறப்பாக படமாக்கி இருப்பது தெரிகிறது .
அருணகிரி இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன . படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்
நசீர் பேசும்போது ” பரீத் படத்தை மிக சிறப்பாக எடுத்து இருப்பார் . டிரைலரும் பாடல்களும் அதன் அடையாளமாகவே விளங்குகிறது . படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார்
இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், முதலில் “வீரையன்” படத்தின் தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். ஏனெனில், இந்த மாதிரியான படங்கள்தான் தமிழ் சினிமாவில் பல புதிய சக்திகள் பிறக்கும் வழியை திறக்கிறது.
இந்த மாதிரியான படங்கள்தான் பல திறமையான கலைஞர்களை வழங்குவதன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறது என்று நான் சொல்வேன்.
எனவே இந்த மாதிரியான படங்களையும், கலைஞர்களையும் பத்திரிகை நண்பர்கள், மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
விண்ணில் பறக்க நினைக்கிற இந்த கலைஞர்களை உள்ளங்கையில் தாங்கிப் பிடித்து நடத்திச் செல்ல வேண்டும்.
நான் இங்கே வந்தது இனிகோ பிரபாகரன் என்கிற ஒற்றை மனிதனுக்காகத்தான். இனிகோ பிரபாகரன், தமிழ் சினிமாவில் இன்று இருக்கக் கூடிய முன்னணி கதாநாயகர்கள் அத்தனை பேருக்கும் நிகரான
ஒரு கதாநாயகன். இனிகோ பிரபாரகரனும்ம் நானும் விரைவில் ஒரு படத்தில்இணைவோம் . இது நடக்கும். எனக்கும் இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது.
கண்டிப்பாக அது நடக்கும். காலம் அந்த வாய்ப்பை வழங்கும்…” என்றார்.
இயக்குநர் சற்குணம் பேசுகையில், “திறமைகள் பல இருந்தும் தன்னடக்கத்தோடு பேசிய இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அருணகிரிக்கு என் அன்பான வாழ்த்துகள்.
அலுங்குற குலுங்கற பாடல் சிறப்பாக வர அவரது திறமைதான் காரணம் .‘வீரையன்’ பாடல்கள் யதார்த்தமாக இருக்கிறத. பாடலாசிரியர்கள் யுகபாரதி, கார்த்திக் நேத்தாவிற்கும் வாழ்த்துகள்.
இந்தப் படத்தின் இயக்குநரான பரீத், என் முதல் படமான ‘களவாணி’ படத்தின் தயாரிப்பாளர் நசீர் சாரின் மச்சானாக எனக்கு அறிமுகமானவர்.
‘களவாணி’ படம் முழுவதும் என்னுடன் நிர்வாக தயாரிப்பளராக பணியாற்றினார். மிகுந்த ரசனைக்காரர். இந்த கதையை என்னிடம் முன்பே சொல்லி இருக்கிறார். சொன்னது போலவே எடுத்திருக்கிறார்.
உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிகப் பெரிய கலைஞர்கள் யாரென்றால் சொந்தக் காசில் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களும், சொந்தக் காசில் படம் எடுக்கிற கதாநாயகர்களும்தான்.
வீரையன் படத்தின் இயக்குநர் பரீத், படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவரும் இந்த படமும் மிகப் பெரிய வெற்றியினை பெற வாழ்த்துகிறேன்…” என்றார்.
இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசுகையில், “இனிகோ பிரபாகரன் என் இனிய நண்பர். இனிகோ, பேசும்போது, ‘சுந்தரபாண்டியன்’ படம்தான் எனக்கு மிகப் பெரிய அடையாளம்’ என்று சொன்னார்.
ஆனால், இனிமேல் இனிகோ பிரபாகரனுக்கு அடையாளமாக, இந்த ‘வீரையன்’ படம்தான் இருக்கப் போகிறது.
இடைவிடாமல் தன்னம்பிக்கையோடு போராடுகிற ஒரு இளைஞன் இனிகோ பிரபாகரன். ‘வீரையன்’ படத்தின் பாடல்கள், எனக்கு ‘களவாணி’ படத்தின் பாடல்களை நினைவுபடுத்துகின்றன.
மிக யதார்த்தமான மெலடிகளாக இருக்கிறது பாடல்கள். இசையமைப்பாளர் அருணகிரிக்கு வாழ்த்துகள்.
டிரெய்லரில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மிக சிறப்பாக இருக்கிறது, அதை இயக்குநர் பரீத் எழுதியிருக்கிறார் என்று சொன்னார்கள்.
அவருக்கு வாழ்த்துகள். 2017-ம் ஆண்டு இனிகோ பிரபாகரனின் வருடமாக இருக்க வாழ்த்துகிறேன்…” என்றார்.
நன்றி கூறிப் பேசிய தயாரிப்பாளர் இயக்குனர் பரீத் ” என் மீது பலர் வைத்துள்ள நம்பிக்கைதான் இந்தப் படம் . பணம் நான் போட்டு இருந்தாலும் பணியாற்றுபவர்களின் நம்பிக்கையும் முக்கியம் .
படப்பிடிப்பின் போது மிகுந்த சினிமா அனுபவம் கொண்ட லைட் மேன்கள் எல்லாம் என்னை பாராட்டும்போது , சரியாகத்தான் வேலை செய்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது .
இனிகோ பிரபாகருக்கு அடிபட்டு அவர் அதீத வலியில் இருந்த போதும், படப்பிடிப்பு நிறகக் கூடாது என்பதற்காக வலி நீக்க மாத்திரைகளையும் ஊசிகளையும் போட்டுக் கொண்டு நடித்து,

படத்தை இனிகோ முடித்துக் கொடுத்தார் . அதை மறக்க மாட்டேன் ” என்றார் நெகிழ்வோடு .
கனவுகளின் விசையாக இருக்கும் வீரையன் வெல்லட்டும் !
பின்குறிப்பு : நாயகி ஷைனி தமிழ் தெரிந்த நிலையிலும் ஆங்கிலத்தில் பேச , அவரை தமிழில் பேசச் சொல்லி அறிவுறுத்திய இனிகோ பிரபாகருக்குப் பாராட்டுகள் !








